விலை குறிப்பிடாமல் 'கபாலி' டிக்கெட்: ரசிகர்கள் கொந்தளிப்பு

 

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.
 இப்படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து ஜூலை 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு படத்தை தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது பல்வேறு திரையரங்குகளில் தொடங்கப்பட்டு இருக்கிறது. சென்னை சத்யம் திரையரங்கில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில மணித்துளிகளில் அனைத்து டிக்கெட்களுமே விற்றுத் தீர்ந்தன.
 மேலும், பல ஊர்களில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில், சில திரையரங்குகளில் விலை என்ன என்பதை பிரின்ட் செய்யாமலேயே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் விலை இல்லை என்பதால் என்ன விலை வேண்டுமானாலும் விற்கலாம் என்பதுதான் இதற்கு காரணமாம்.
 'கபாலி' படத்தின் டிக்கெட் விலையைக் கேட்டுவிட்டு பலரும், என்ன இவ்வளவு விலையா என்று தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். ஏற்கெனவே, 'வேதாளம்' படத்துக்கு அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக புகார் எழுந்து நீதிமன்றம் வரை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விற்கப்பட வேண்டும். குறிப்பாக, முக்கிய நட்சத்திரங்களின் படங்களின் வெளியாகும்போது கண்காணிப்பு அவசியம் என்று சினிமா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் எழும் செங்கல்பட்டு பிரச்சினை
 'தெறி' திரைப்படத்துக்கு தயாரிப்பாளர் தாணு அதிக விலை கேட்கிறார் என்று சர்ச்சையானது. இதனால் செங்கல்பட்டு விநியோக ஏரியாவில் அப்படம் வெளியாகவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்ட பின்பே அங்கு வெளியானது.
 இதே சூழல் தற்போது 'கபாலி' படத்துக்கும் ஏற்பட்டு இருக்கிறது. "செங்கல்பட்டு திரையரங்க உரிமை குறித்து பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்று வருகிறது. இன்று இரவு அல்லது திங்கட்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்" என வெற்றி திரையரங்கத்தின் உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

பாகுபலி சாதனையை முறியடித்த கபாலி

நாளை மறுநாள் திரைக்கு வரஇருக்கும் ரஜினியின் ‘கபாலி’ படத்துக்கு உலகம் முழுவதும்  பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கலைப்புலி எஸ். தாணு இயக்கத்தில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கிஷோர் மற்றும் சீன, மலேசிய வில்லன் நடிகர்கள் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 

படத்தின் புரொமோஷன்களும், படத்தில் இடம்பெறும் காட்சிகள் பற்றிய விவரங்கள் என படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் அறிமுககாட்சி மட்டும் ஸ்லோ மோஷனில் சுமார் ஒன்றரை நிமிடங்கள் வருவதாகவும், அறிமுகக்காட்சியே சண்டைக்காட்சி என்று கூறப்படுகிறது.

இப்படி ஒரு மாஸ் என்ட்ரி இருந்தால் தியேட்டர் ஆரம்பமே அதிரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படத்தின் விளம்பரம் பாலிவுட் சினிமா மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அளவுக்கு இருக்கிறது. ஏன் ஹாலிவுட் என்று கூட சொல்லலாம் விமானத்தில் விளம்பரம் என்பதெல்லாம் இதுவரை யாரும் யோசித்திராத ஒன்று தான். விமானம் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை, பத்திரிகைகள் , டி.வி, இணையதளம், செல்போன் அனைத்திலும் கபாலி மயமாகவே உள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ‘கபாலி’ என்ற பெயரை கேட்டாலே குதூகலப்படும் அளவுக்கு இதன் தாக்கம் எங்கும் நிறைந்திருக்கிறது. 

இதுமட்டுமல்ல முத்தூட் பின்கார்ப் என்ற நகை அடகுவைக்கும் நிறுவனம் கபாலியின் பெயரில் தங்கம், வெள்ளி காசுகளை வெளியிடுகிறது. கேட்பரிஸ் நிறுவனம் சாக்லேட் விளம்பரம், ஏர்டெல் கபாலி ஆபர் என இன்னொரு பக்கம் அதிரடி காட்டுகிறது. இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் கபாலியை பயன்படுத்தி வருகிறது. கபாலி பொம்மையும் இந்திய மதிப்பில் 1000த்தில் தொடங்கி 5000 வரை விற்கப்படுகிறது.

மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாகுபலி’  படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட பிறகு அதன் சாதனைகள் பற்றி பேசப்பட்டது. ஆனால் ‘கபாலி’ திரையிடப்படுவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

‘பாகுபலி’ படம் டிரைலர் ‘யுடியூப்’ பில் வெளியிடப்பட்டது. இதை ஒருகோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் ‘கபாலி’ படம் திரைக்கு வருவதற்கு முன்பே இதன் ‘டீசரை’ 2 கோடிக்கும் அதிகமானோர் யுடியூப்பில் பார்த்து விட்டனர்.‘பாகுபலி’ தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழிகளில் வெளியானது. படம் திரைக்கு வந்த பிறகுதான் சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்யப்பட்டது. சீனாவில் ‘பாகுபலி’ வருகிற 22-ந் தேதி தான் திரைக்கு வருகிறது. 

ஆனால் ‘கபாலி’ தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மட்டுமல்ல மலாய் மொழியிலும் திரையிடப்படுகிறது. சீன மொழியிலும் வெளியிட இப்போதே ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேஷியா விலும் அந்தந்த மொழிகளில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு திரைக்கு வருகிறது.   உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் ‘ரெக்ஸ் சினிமாஸ்’ திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்ற பொருமையை ‘கபாலி’ பெற்றுள்ளது. உலக அளவில் ‘பாகுபலி’ 4 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் கபாலி 5 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

பாகுபலி படத்தின் வியாபாரம் ரூ.162 கோடியை தொட்டதாக கூறப்பட்டது. ஆனால் ‘கபாலி’ அதையும் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. ‘கபாலி’ வெளிநாட்டு வினியோக உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.‘பாகுபலி’ படத்தை பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூகவலைதளங்கள் மூலம் பிரபலப்படுத்தினார்கள். படக்குழுவினர் சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு நடிகர்&நடிகைகள் சென்று ‘பாகுபலி’ யை பிரபலப்படுத்தினார்கள். ஆனால் ‘கபாலி’ படத்துக்காக இந்தியாவில் முதல் முறையாக விமானத்தில் ‘கபாலி’ போஸ்டர் இடம் பெற்றது. ஏர்& ஏசியா விமான நிறுவனம் பல்வேறு சலுகைகளையும்அறிவித்துள்ளது.

இது தவிர தங்க, வெள்ளி நாணயங்கள் வெளியீடு,  தனியார் நிறுவனங்கள் தொலை தொடர்பு நிறுவனங்கள், ஆன்லைன் சேவை நிறுவனங்கள் அனைத்தும் சலுகைகளை அறிவித்து ‘கபாலி’ படத்தை விளம்பரப்படுத்துவதுடன் தங்களுக்கும் விளம்பரம் தேடிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இது எப்போதும், எந்த படத்துக்கும் இல்லாத புதிய யுத்தியாகும்.‘கபாலி’ திரைக்கு வரும் தினத்தை ரசிகர்கள் மட்டுமல்ல, பல்வேறு நிறுவனங்களும், திரை உலகினரும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்து இருப்பதும் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

வெளிநாடுகளில் இந்திய படம் என்றால் இந்திபடங்கள்தான் என்ற நிலை இருந்தது. அதை ‘பாகுபலி’ ஓரளவு முறியடித்தது. இப்போது ரஜினியின்’கபாலி’ படத்தின் மூலம் இந்திய படங்கள் என்றாலே அது தமிழ்படம் தான் என்று வெளிநாட்டினர்  கருதும் அளவுக்கு ‘கபாலி’ புகழ் கொடிகட்டி பறக்கிறது. திரைக்கு வந்த பிறகு மேலும் சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் வெளியாகும் கபாலி!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கலைப்புலி தாணு தயாரித்துள்ள கபாலி படம் வரும் 22-ம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. கபாலி திரைப்படத்தில் ராதிகா ஆப்தே, அட்டகத்தி தினேஷ், கலையரசன், கிஷோர், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. கபாலி திரைப் படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 32 நிமிஷங்கள்.
படம் வெளிவருவதற்கு முன்பு அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார்கள் ரசிகர்கள். வட இந்தியாவில் 1000 திரையரங்குகளில் வெளியாகும் கபாலி படம், அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு என 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கபாலியை அமெரிக்காவில் சினி கேலக்ஸி நிறுவனம் வெளியிடுகிறது. 


இதனிடையே கபாலி செல்லிடப்பேசி செயலியும் (செல்போன் ஆப்) வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தயாரிப்பாளர் தாணு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுமட்டுமில்லாமல் கபாலி படத்தின் புதிய புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கில் ‘கபாலி’ பிரீமியர் காட்சி!

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் பிரான்ஸ் திரையரங்கமான ரெக்ஸ் சினிமாஸில் திரையிடப்படவுள்ளது.
ஜூலை 14 அன்று கபாலி படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட உள்ளதாக ரெக்ஸ் சினிமா அறிவித்துள்ளது. பாரிஸில் உள்ள இந்தத் திரையரங்கம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அரங்கம் ஆகும். ஒரே சமயத்தில் 2800 அமர்ந்து படம் பார்க்கமுடியும்.
ஜூலை 14 அன்று பிரீமியர் காட்சி நடைபெற உள்ளதால் அடுத்தநாள் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனால், சமீபத்திய நிலவரப்படி படம் இன்னும் ஒருவாரத்துக்குத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை: குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து சற்று குறைந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு விழுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது.  குற்றாலம் பகுதியில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் சீசன் களைகட்டியுள்ளது.

தொடர்கதையாகி வரும் யானை பலி: கோவையில் ரயில் மோதி மேலும் ஒரு யானை சாவு

வாலையாறு: கோவை அருகே வாலையாறு கிராமத்தில் ரயில் மோதி 9 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
தமிழகம்-கேரள எல்லையில் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லை வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 9 யானைகள் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போல யானைகளின் உயிரிழப்பை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதை அடுத்து கோவையில் யாகம் நடத்தப்பட்டு வருகின்றது.

ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்; செல்போன் சேவை முடக்கம்

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் புர்ஹான் வானியின் மரணத்தைத் தொடர்ந்து பல இடங்களில் வன்முறை பரவியதை அடுத்து ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
புல்வாமா மாவட்டம் மற்றும் ஸ்ரீநகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, யாத்திரை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கு: திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸ் திட்டம்

சென்னை: இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளை காவல்துறை துவக்கியுள்ளது.
அதன்படி, தற்போது புழல் சிறையில் உள்ள ராம்குமாரை திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
அடையாள அணிவகுப்புக்குப் பிறகு ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது கொலை வழக்கில் மேலும் ஆதாரங்களை திருட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே, ராம்குமாருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு, ஷிப்ட் முறையில் 3 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

24 மணி நேரமும் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள்

24 மணி நேரமும் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், ஓட்டல்கள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது..

A) வரவேற்கத்தக்கது

B) ஏற்புடையதல்ல

C) விவாதத்துக்குரியது

சாதகம், பாதகம்.. 

கேரளாவில் மீண்டும் வெளியாகும் ‘பாகுபலி’!

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகுபலி படத்தை மீண்டும் கேரளாவில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வருடம் ஜூலை 10-ம் தேதி படம் வெளியானது. ஆனால் அதே ஜூலை மாதம் பாகுபலி படத்தின் மலையாளப் பதிப்பை மீண்டும் வெளியிட உள்ளோம். தேதி இன்னமும் முடிவு செய்யவில்லை. திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்க்க மக்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்று கேரளாவில் படத்தை வெளியிட்ட குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இயக்குநர் மணிகண்டனின் ‘குற்றமே தண்டனை’ பட டிரெய்லர்! (30/06/2016) ‘காக்கா முட்டை’ மணிகண்டனின் அடுத்தப் படமான ‘குற்றமே தண்டனை’யின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது

‘காக்கா முட்டை’ மணிகண்டனின் அடுத்தப் படமான ‘குற்றமே தண்டனை’யின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

சுவாதி கொலையாளி சென்னை திருவான்மியூரில் கைதா?.. பரபரப்பு

சென்னை: சென்னை திருவான்மியூரில் வைத்து சுவாதி கொலையாளியை போலீஸார் கைது செய்துள்ளதாக நேற்று இரவுக்கு மேல் ஒரு பரபரப்பு கிளம்பியது. ஆனால் இதை போலீஸார் மறுத்துள்ளனர். அதேசமயம், கொலையாளி குறித்த முக்கிய விவரத்தை இன்று பிற்பகலுக்குள் போலீஸார் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இளம் பெண் சுவாதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற நபர் துணிகரமாக தப்பிச் சென்று விட்டார். அவர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், ஏன் கொலை செய்தார் என்ற விவரம் தெரியவில்லை.




சுவாதி கொலையாளியை நெருங்குகிறது காவல்துறை.. உதவுகிறது ஆதார் அட்டை!

சுவாதி கொலையாளியை நெருங்குகிறது காவல்துறை.. உதவுகிறது ஆதார் அட்டை!


சென்னை: இன்போசிஸ் ஊழியர், சுவாதி கொலை குற்றவாளியை கைது செய்வதில் ஆதார் அட்டை உதவிகரமாக இருக்கப்போகிறது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகளான சுவாதி (24), செங்கல்பட்டு அருகேயுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். பணியிடம் செல்வதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அவர் ரயிலுக்காக காத்திருந்தபோது, வாலிபர் ஒருவர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

ஆதார் உதவி 
   பழைய குற்றவாளிகளின் கை ரேகையோடு கொலையாளியின் கை ரேகை ஒத்துப்போகவில்லை என்பதால், ஆதார் அடையாள அட்டை பிரிவு அதிகாரிகளின் துணையை நாடியுள்ளனர் சென்னை போலீசார்.

விசாரணை மாற்றம் 

 கொலையாளியை அடையாளம் காணும்வகையில் 2 சிசிடிவி வீடியோக்கள் கிடைத்தும், கொலையாளியை நெருங்க முடியாத ரயில்வே போலீசாரின் திறமையின்மை காரணமாக, கொலை வழக்கு நேற்று சென்னை சிட்டி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

கை ரேகை துருப்பு சீட்டு 
 ஆதார் அட்டையில் அனைவரது கை ரேகையும் கட்டாயம் பதிவாகியிருக்கும். கொலையாளியின் கை ரேகையை வைத்து அதற்கு மேட்ச்சான கைரேகையை தேடினால், கொலையாளியின் முழு விவரமும் போலீசாரின் கைக்கு வந்துவிடும். இதை வைத்து போலீசார் அவனை வேட்டையாடிவிடலாம். எனவே இக்கொலை வழக்கில் ஆதார் அட்டை முக்கிய பங்கு வகிக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரிவாள் பறிமுதல் 
  சுவாதியை கொன்ற, கொலையாளி அரிவாளை, சற்று தொலைவிலுள்ள தண்டவாளத்தில் வீசி எறிந்துவிட்டு சென்றான். போலீசார் அதை பறிமுதல் செய்த நிலையில், அதில் பதிவான கைரேகையையும், சுவாதி உடலில், ஆடையில் கொலையாளி கை பட்ட இடங்களில் சேகரிக்கப்பட்ட கை ரேகையையும் கொண்டு தங்களிடமுள்ள கொலையாளி, ரவுடிகளின் கை ரேகையுடன் ஒத்துப்போகிறதா என ஆய்வு செய்தனர்.

வாட்ஸ்அப் புரொபைல் போட்டோவை திருடி மார்பிங் பேஸ்புக்கில் ஆபாசபடம் வெளியானது பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை


சேலம்: சேலம் அருகே பேஸ்புக்கில் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப்படம் வெளியானதால், பள்ளி ஆசிரியை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை புவனகணபதி கோயில் ெதருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. விசைத்தறி தொழிலாளி. இவரது மகள் வினுப்பிரியா (21). திருச்ெசங்கோடு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் படித்தார். பின்னர் இளம்பிள்ளை தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். அவருக்கு திருமணம் செய்ய  பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். கடந்த 16ம்தேதி அண்ணாதுரையின் செல்போனுக்கு ஒருவர் போன் ெசய்துள்ளார். அதில் பேசிய நபர், வினுப்பிரியா குறித்து அருவருக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். தொடர்ந்து அதேபோல் போன் வந்ததால், அண்ணாதுரை அந்த சிம்கார்டை கழற்றி போட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 21ம்தேதி, அண்ணாதுரையின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ‘வினுப்பிரியா மைதிலி’ என்ற பேஸ்புக் ஐடியில் இருந்து நட்பு வட்டத்தில் இணையக் கேட்டு மெசேஜ் வந்துள்ளது. அது வினுப்பிரியாவின் ஐடி என்று நினைத்த உறவினர், அதை ஏற்று, அந்த ஐடியை திறந்து பார்த்துள்ளார். அதில் வினுப்பிரியாவின் ஆபாச படங்கள் இருந்துள்ளது. மேலும்,  இளம்பிள்ளையை சேர்ந்த பலர், அந்த பேஸ்புக் ஐடியின் நட்பு வட்டத்தில் இருந்துள்ளனர். உடனே அவர் இது குறித்து அண்ணாதுரையிடம் கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை, மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும், சங்ககிரி டிஎஸ்பி கந்தசாமியிடமும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சேலம் சைபர் கிரைம் ேபாலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தார். 
மேலும், இந்த படத்தை வெளியிட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பேஸ்புக் ஐடியை முடக்க வேண்டும் என்று கோரிக்ைக வைத்தனர். அதற்கு போலீசார், பேஸ்புக் சர்வர் வெளிநாட்டில் உள்ளதால் உடனடியாக முடக்க முடியாது. குறைந்த பட்சம் 20 நாட்களாவது ஆகும் என்று ெதரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, அந்த ஐடியில் வினுப்பிரியாவின் படத்தை போட்டு, தொடர்புக்கு என்று அண்ணாதுரையின் செல்போன் நம்பரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அண்ணாதுரை, சங்ககிரி டிஎஸ்பியிடம் புகார் தெரிவிக்க மனைவியுடன் நேற்று காலை 11 மணிக்கு பைக்கில் கிளம்பியுள்ளார். அப்போது வினுப்பிரியா மற்றும் அவரது பாட்டி கந்தம்மாள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். காலை 11.30 மணியளவில் கந்தம்மாள் குளிக்க வந்தபோது, வீட்டின் இருபக்க கதவுகளும் மூடப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, வினுப்பிரியா தூக்கில் பிணமாக தொங்கியது தெரிந்தது. தகவலறிந்து வந்த பெற்றோர் கதறி துடித்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியானதால் தனியார் பள்ளி ஆசிரியை  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வினுப்பிரியாவின் தற்கொலையை தொடர்ந்து அவரது பெயரில் செயல்பட்ட பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது.

வாட்ஸ்அப் புரொபைல் படம் மார்பிங்: அண்ணாதுரை தனது ஸ்மாட் போன் வாட்ஸ்அப்பில் மகள் வினுப்பிரியாவின் படத்தை புரொபைல் படமாக வைத்துள்ளார். அந்த படத்தை தான், விஷமிகள் காப்பி செய்து மார்பிங்கில் ஆபாச படமாக வெளியிட்டுள்ளது போலீஸ் விசாரணையில தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக வெவ்வேறு கோணங்களில் படங்கள் வெளியானதால் குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் காரணமாகவே டிஎஸ்பியிடம் புகார் ெதரிவிக்க அண்ணாதுரை சென்ற சமயத்தில் வினுப்பிரியா தற்கொலை செய்துள்ளார். ஆசிரியராக இரண்டு நாட்கள் பணி: வினுப்பிரியா கடந்த ஆண்டு பி.எஸ்சி முடித்துள்ளார்.  தொடர்ந்து வீட்டில் இருந்த அவருக்கு, மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.  இதனிடையே அவரது தாத்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக  கூறப்படுகிறது. உடனடியாக வீட்டில் விஷேசம் நடத்த முடியாது என்பதால்,  வேலைக்கு செல்ல வினுப்பிரியா முடிவு செய்துள்ளார். இதனால் அங்குள்ள தனியார்  பள்ளி ஒன்றில் ஆசிரியராக சேர்ந்துள்ளார். பணிக்கு சேர்ந்த இரு  தினத்திலேயே, பேஸ்புக்கில் அவரது புகைப்படம் பரவி உள்ளது. இதனால் உடனடியாக வேலையில் இருந்து நின்ற வினுப்பிரியா, வீட்டில் இருந்துள்ளார்.

பெண் கேட்ட வாலிபரிடம் விசாரணை
அண்ணாதுரையின் நெருங்கிய உறவினர் வீடு மேட்டூரில் உள்ளது. அங்கு வினுப்பிரியாவும் தந்தையுடன் அடிக்கடி சென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வினுப்பிரியாவை பெண் ேகட்டுள்ளார். அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அண்ணாதுரை, பெண் கொடுக்க மறுத்துள்ளார். அந்த வாலிபர் கடந்த 14ம்தேதியும், அண்ணாதுரையை போனில் தொடர்பு கொண்டு ெபண் கேட்டுள்ளார். இதையடுத்து வாட்ஸ்அப்பில் ஆபாச படங்கள் பரவியதால், அந்த வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சென்னையை சேர்ந்த முகநூல் தோழி ஒருவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.

‘நான் எந்த தப்பும் செய்யலை என்னை நம்புங்க...’
தற்கொலை செய்த ஆசிரியை வினுப்பிரியா எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. அதில்,
முதல்ல  நீங்க எல்லாரும் என்னை மன்னிருச்சுருங்க. என்னோட லைப் போனதுக்கு அப்பறம்  நான் வாழ்ந்து என்ன பண்ண போறன். எனக்கு வாழ பிடிக்கல. என்னோட அம்மா,  அப்பாவே என்னை நம்பாதப்போ, நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம். அவங்களே என்ன பத்தி கேவலமா பேசுறாங்க., சத்தியமா ெசால்றன், நான் என் போட்டோஸ யாருக்கும் அனுப்பல. நான் எந்த தப்பும் பண்ணல. பிலீவ் மி.. ஒன் செகன்ட் சாரி.. சாரி.. பை
வினுப்பிரியா பி.எஸ்சி இவ்வாறு அந்த கடிதத்தில் வினுப்பிரியா தெரிவித்திருந்தார்.

வாட்ஸ்அப்பும், பேஸ்புக்கும் எத்தனை பொண்ணுங்களை சாகடிக்குமோ? 
வினுப்பிரியாவின்  தாயார் மஞ்சு கூறுகையில், ‘‘போலீசாரிடம் புகார் ெதரிவித்து எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வாட்ஸ்அப்பும், பேஸ்புக்கும் இன்னும்  எத்தனை பொண்ணுங்கள கொல்லுமோ தெரியவில்லை. எனது மகள் சாவுக்கு காரணமான  குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும். அதுவரை  சடலத்தை நாங்கள் வாங்க மாட்டோம். மகள் சாவுக்கு நீதி கிடைக்காவிட்டால் அடுத்து நடப்பது எனது மரணம் தான்’ என்று கதறியழுதபடி வீட்டுக்கு  புறப்பட்டுச் சென்றார்.

போலீஸ்தான் பொறுப்பு தந்தை குற்றச்சாட்டு
வினுப்பிரியாவின் தந்தை அண்ணாதுரை கூறியதாவது: சைபர் கிரைம் ேபாலீசார், பேஸ்புக்கின் சர்வர் வெளிநாட்டில் உள்ளதால், 20  நாட்களுக்கு பிறகு தான் அந்த பேஸ்புக் ஐடியை முடக்கி வைக்க முடியும் என  கூறிவிட்டனர். ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்த 5 நிமிடத்திலேயே  அந்த பேஸ்புக் ஐடி முடக்கப்பட்டுள்ளது. எனவே எனது மகள் சாவிற்கு தமிழக  அரசும், காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும். அரசியல்வாதிகள், பணவசதி  உள்ளவர்கள் புகார் ெகாடுத்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்  போலீசார், எங்கள் புகாரின் மீது மெத்தனம் காட்டியுள்ளனர். எனது மகளுக்கு  வந்த இந்தநிலை, இனிமேல் யாருக்கும் வர கூடாது. எனவே இந்தியாவில் பேஸ்புக்கிற்கு தடை விதிக்க வேண்டும். வினுப்பிரியா சாவு குறித்து  வழக்குப்பதிவு செய்வதுடன், உண்மையான குற்றவாளியையும் உடனடியாக கைது ெசய்ய  வேண்டும். அதுவரை எனது மகள் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம். இவ்வாறு  அண்ணாதுரை கண்ணீர் மல்க கூறினார்.



































2 மணி நேரம் வேடிக்கை பார்த்த மக்கள்… சென்னை கருணையற்ற நகரமா?

சுவாதி கொலையை தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்த பயணிகளை விமர்சித்து… ‘நான் சுவாதி பேசுகிறேன்’ என்ற தலைப்பில் ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான தகவல் பரவி வருகிறது. 
சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டபோது, ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். கொலையாளி ஒரே ஆள்தான். கல்லை கொண்டு தாக்கத் தொடங்கியிருந்தால்கூட, கொலையாளி மிரளத் தொடங்கியிருப்பான். சுவாதி உதவிக்கு யாரும் வராத நிலையில் தனி ஆளாக போராடி பலியாகியுள்ளார்.
கொலையாளி தப்பி ஓடும்போதும், யாரும் பிடிக்க முன்வரவில்லை. கொலையாளி அங்கிருந்து சென்ற பின்னரும்கூட உயிருக்கு போராடிய சுவாதிக்கு உதவி செய்யகூட யாரும் முன்வரவில்லை. சென்னை மக்களின் இந்த கருணையற்ற முகத்தை விமர்சித்து, வாட்ஸப்பில் ”நான் சுவாதி பேசுகிறேன்” என்று உருக்கமான பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
”இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன். எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதாயத்தில் நானும் ஒருத்தி தான்.
எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன், என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றார்.
உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்களின் மனதுக்கு தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழிய பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது. இன்று நான் வாய்கிழியபட்டு தான் இறந்தேன்.
உங்களில் ஒருவருக்குகூட அதை தடுக்க ஆண்மை இல்லையே. அவனை தடுக்காத உங்களின் கயமைகூட எனக்கு புரிந்தது. ஆனால் அவன் போன பின்பு எனக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணீர் கொடுக்க கூடவா ஆள் இல்லை.
2 மணி நேரம் என்னை வேடிக்கை பார்த்தீர்களே அந்த கணங்கள்கூட உங்களை சுடவில்லையா? பெண் பிள்ளைகள் வெளியில் போகும்போது பார்த்துப் போக சொல்லும் நீங்கள், அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விதையிலே மக்கச் செய்யுங்கள்.”
சொல்ல வார்த்தைகள் இல்லை..!

சுவாதி வழக்கை விசாரிக்க பிரத்யேக திட்டம்: சென்னை மாநகர காவல்துறை ஆணையர்

சுவாதி வழக்கை விசாரிக்க பிரத்யேக திட்டம்: சென்னை மாநகர காவல்துறை ஆணையர்

சுவாதி வழக்கை விசாரிக்க பிரத்யேக திட்டம்: சென்னை மாநகர காவல்துறை ஆணையர்


சென்னை: சுவாதி படுகொலை வழக்கை விசாரிக்க பிரத்யேகத் திட்டம் வகுத்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், சுவாதியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை, மென் பொறியாளர் சுவாதி கத்தியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் என சந்தேகிக்கப்படுபவரின் சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் வெளியிட்டு, குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
வழக்கின் தீவிரம் காரணமாக, ரயில்வே போலீஸாரிடம் இருந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு விசாரணை நேற்று மாற்றப்பட்டது. குற்றவாளியைப் பிடிப்பதில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றமும் நேற்று அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்துறை செயலர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பிராவோ அசத்தல்; தெ.ஆப்பிரிக்கா சொதப்பல் - வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி




வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
 

இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்கள் எடுத்தது.
 
அந்த அணியில் அதிகப்பட்சமாக அபாரமாக ஆடிய டேரன் பிராவோ 103 பந்துகளில் [12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 102 ரன்கள் எடுத்தார். கீரன் பொல்லார்ட் 71 பந்துகளில் [7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 62 ரன்களும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 46 பந்துகளில் [3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 40 ரன்களும் எடுத்தனர்.
 
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


 
அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான குவிண்டன் டி காக் [6], ஃபாப் டு பிளஸ்ஸி [3], டி வில்லியர்ஸ் [2], ஹசிம் ஆம்லா 16, டுமினி [5], கிறிஸ் மோரிஸ் [7] என அடுத்தடுத்து வெளியேறியதால் திக்குமுக்காடியது. ஒரு கட்டத்தில் 65 ரன்களுக்குள் முக்கிய 6 விக்கெட்டுகளை இழந்தது.
 
இதனால், தென் ஆப்பிரிக்கா 100 ரன்களுக்குள்ளேயே சுருண்டு விடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ஆபாந்தவனாக நின்ற பெஹார்டியன் 35 ரன்களும், வெய்ன் பார்னல் 28 ரன்களும் எடுத்து அணியின் மானத்தை காப்பாற்றினர்.
 
அதேபோல கடைசியில் களமிறங்கிய இம்ரான் தாஹிர் 32 ரன்களும், மோர்னே மோர்கல் 29 ரன்கள் எடுத்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுனில் நரைன் மற்றும் கேப்ரியேல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதிகள் நிர்வாண ஊர்வலம்

ராஜஸ்தான் மாவட்டம் உதய்ப்பூரில் அங்குள்ள ஒரு சமூகத்தில் உள்ள ஒரு இளம் பெண்  கட்டுப்பாட்டை மீறி திருமணமான வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். அந்த் பெண் தன் காதலனுடன் அதே ஊரில் வசித்து வந்துள்ளார். பெண்ணின்  வீட்டிற்கு சென்ற அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள  இதனையடுத்து அப்பெண்ணின் கணவர், அந்த பெண்ணையும், அடித்து உதைத்து உள்ளனர். 
பின்னர் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்த அவர்கள் அந்த பெண்ணையும் அவரது  காதலரையும் நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் மூன்று நாட்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளனர்.
அப்பெண்ணின் கணவர் நிர்வாணப்படுத்தப்பட்ட இருவரின் புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அந்த பெண்ணின் காதலர் குடும்பத்தினர் 80,000 ரூபாயை செலுத்தி தங்கள் மகனை அழைத்துச்சென்றுள்ளனர். 
இது தொடர்பாக காவல் துறையினர் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 3 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு



தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக சீனிவாசன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது, சங்கத்தின் தலைவராக இந்தியா சிமெண்ட் சீனிவாசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 15 ஆவது முறையாக ர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
வருவாய்த் துறையில் ஓட்டுநர் பணி: ஜூலை 16-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

வருவாய்த் துறையில் ஓட்டுநர் பணி: ஜூலை 16-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள வாகன (ஜீப்) ஓட்டுநருக்கான 7 காலிப்பணியிடங்களுக்கான அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  தகுதியுள்ளவர்கள் வரும் 16.07.2016 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இனசுழற்சி முறையில் பொது, ஆதிதிராவிடர், அருந்ததியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும். 1.9.2015 அன்று ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்கள் 35 வயது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயது  இதர பிரிவினர் 30 வயதுக்கு உள்ளாகவும் இருக்கவேண்டும்.  குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி தேவை. அரசு ஓட்டுநர் உரிமத்துடன், குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்களை ஓட்டியதற்கான நடைமுறை அனுபவம் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை - 622 005 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தடை என்பது முடிவல்ல - துவக்கம் ஒலிக்கட்டும் நம் உரிமை முழக்கம்

Takkaru Takkaru - Releasing ON 25th


தடை என்பது முடிவல்ல - துவக்கம்
ஒலிக்கட்டும் நம் உரிமை முழக்கம்



கொலை நகரமான தலைநகரம்..! சென்னையில் 24 மணி நேரத்தில் 6 பெண்கள் படுகொலை

சென்னை  ராயப்பேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கத்தில் ஒரு பெண்ணும், வடசென்னையில் ஒரு பெண்ணும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தலைநகரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



சென்னை ராயப்பேட்டை, முத்து தெருவைச் சேர்ந்தவர் சின்னராசு.பட்டினப்பாக்கத்தில் ஸ்வீட் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா (18), பரிமளா (19), சினேகா (16) என்று மூன்று மகள்கள்.  முதல் மனைவி இறந்து விட்டதால் சந்தன வீனா (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பவித்ரா, பரிமளா  சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். சினேகா பிளஸ்2 படித்தார். இவர்கள் கடந்த வாரம் சொந்த   ஊரான காரைக்குடிக்குச் சென்று வந்துள்ளனர்.


கடந்த திங்கள் கிழமை முதல் இவர்களது வீடு பூட்டியே கிடந்துள்ளது.இந்நிலையில் இன்று (வெள்ளி) காலை அவர்கள் வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து ராயபேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நான்கு பெண்களும் நிர்வாண நிலையில் ஆளுக்கொரு மூலையில் கிடந்துள்ளனர். இவர்களது உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. தலைமறைவாக இருந்த சின்னராசுவை போலீஸார் அவரை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரையும் சின்னராசு கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இந்த கொலை நடந்துள்ளதாகவும், எங்களது கவனத்தை திசைத் திருப்பவே 4 பேரையும் நிர்வாணமாக்கியுள்ளார்  சின்னராசு என காவல்துறையினர் தெரிவித்தனர். 


மனைவி, மகள்கள் நிர்வாண நிலையில் இருப்பதால் சின்னராசு சைக்கோவாக இருக்கலாமா என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அட, சிவகார்த்திகேயனா இது? ‘ரெமோ' முதல் பார்வை! (படம் & வீடியோ)


சிவகார்த்திகேயன் நடித்துவரும் ரெமோ படத்தின் முதல் பார்வைப் புகைப்படங்களும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் படத்தை பாக்கியராஜ் பாரதி இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ், கதாநாயகியாக நடிக்கிறார். ஆர்.டி. ராஜா தயாரிக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.



செப்டம்பரில் மினி ஐபிஎல் போட்டி: பிசிசிஐ அறிவிப்பு

சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குப் பதிலாக மினி ஐபிஎல்-ஐ தொடங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
உலகின் முக்கிய கிரிக்கெட் கிளப்புகளைக் கொண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டி கடந்த சில வருடங்களாக நடந்து வந்தது. ஆனால், அதற்குப் பெரிய வரவேற்பு இல்லாததால் மாற்று ஏற்பாடாக வேறொரு போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதம் மினி ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது என்று அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டம் வரும் தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
* இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு.
* செப்டம்பர் மாதம் மினி ஐபிஎல் போட்டி நடைபெறும். எல்லா 8 ஐபிஎல் அணிகளும் இதில் பங்கேற்கும். இரண்டு வாரங்கள் நடைபெறும்.
* ரஞ்சி டிராபி ஆட்டங்கள் பொதுவான ஆடுகளத்தில் நடத்தப்படும்.

ஆச்சரியமான தகவல்: வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில் சென்னைக்கு 3ம் இடம்

சென்னை: இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில் சென்னைக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.
நியூ யார்க்கில் இருந்து செயல்படும் மெர்சர் என்று நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் மக்கள் வாழ அதிகம் செலவாகும் நகரங்களில் தில்லி முதலிடத்திலும், மும்பையை அடுத்து சென்னை 3ம் இடத்திலும் உள்ளது.
மனிதர்களுக்குத் தேவையான 200 அடிப்படைப் பொருட்களின் விலைகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் வீடு முதல் போக்குவரத்து வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆய்வின் மூலம் கிடைத்திருக்கும் தகவல்கள், பல நகரங்களில் கிளைகளை வைத்துள்ள நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
உலக அளவில் எடுத்துக் கொண்டால், சென்னை மாநகரம் 158வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் உலகளவில் சென்னை 157வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
துணி மற்றும் காலணிகளைப் பொருத்தவரை சென்னையில் சற்று விலை அதிகம் என்றும், தில்லி மற்றும் மும்பையை ஒப்பிடும் போது பால், காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை சென்னையில் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டை விட, 13% சென்னையில் அதிகரித்துள்ளதும், கடந்த ஓராண்டில் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசே விற்பனை செய்யும் மது, சென்னையில் மலிவாகக் கிடைக்கும் என்று நினைத்தால் அதுவும் தவறு. மும்பையோடு ஒப்பிடுகையில் சென்னையில் மது வகைகளின் விலையும் அதிகம்.
தகவல் தொழில்நுட்ப நகரமாக மாறி வரும் பெங்களூரு 22வது இடத்தில் உள்ளது. உலக அளவில் 180வது இடத்தைப் பிடித்துள்ளது.