100 யூனிட் இலவச மின்சார திட்டம் மக்களை ஏமாற்றும் செயல்-டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆணைப்படி 2 மாதங்களுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால் அதற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு தான் சிக்கல் ஏற்படும்.

வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஏற்கனவே இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாக்கு வங்கியை குறிவைத்து கோடீஸ்வரர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் பா.ம.க.வுக்கு உடன்பாடு இல்லை.

ஏற்கனவே மீளமுடியாத கடன் சுமையில் சிக்கி, ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வட்டி செலுத்தி வரும் மின்சார வாரியத்தை மேலும் நலிவடையச் செய்யவே இத்திட்டம் வழிவகுக்கும். அதே நேரத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துவிட்டு, அதை முறையாக வழங்காமல் 1.11 கோடி குடும்பங்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க.வின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் தமிழக மக்கள் இனியாவது விழிப்புணர்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this

Related Posts