2 மணி நேரம் வேடிக்கை பார்த்த மக்கள்… சென்னை கருணையற்ற நகரமா?

சுவாதி கொலையை தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்த பயணிகளை விமர்சித்து… ‘நான் சுவாதி பேசுகிறேன்’ என்ற தலைப்பில் ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான தகவல் பரவி வருகிறது. 
சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டபோது, ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். கொலையாளி ஒரே ஆள்தான். கல்லை கொண்டு தாக்கத் தொடங்கியிருந்தால்கூட, கொலையாளி மிரளத் தொடங்கியிருப்பான். சுவாதி உதவிக்கு யாரும் வராத நிலையில் தனி ஆளாக போராடி பலியாகியுள்ளார்.
கொலையாளி தப்பி ஓடும்போதும், யாரும் பிடிக்க முன்வரவில்லை. கொலையாளி அங்கிருந்து சென்ற பின்னரும்கூட உயிருக்கு போராடிய சுவாதிக்கு உதவி செய்யகூட யாரும் முன்வரவில்லை. சென்னை மக்களின் இந்த கருணையற்ற முகத்தை விமர்சித்து, வாட்ஸப்பில் ”நான் சுவாதி பேசுகிறேன்” என்று உருக்கமான பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
”இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன். எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதாயத்தில் நானும் ஒருத்தி தான்.
எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன், என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றார்.
உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்களின் மனதுக்கு தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழிய பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது. இன்று நான் வாய்கிழியபட்டு தான் இறந்தேன்.
உங்களில் ஒருவருக்குகூட அதை தடுக்க ஆண்மை இல்லையே. அவனை தடுக்காத உங்களின் கயமைகூட எனக்கு புரிந்தது. ஆனால் அவன் போன பின்பு எனக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணீர் கொடுக்க கூடவா ஆள் இல்லை.
2 மணி நேரம் என்னை வேடிக்கை பார்த்தீர்களே அந்த கணங்கள்கூட உங்களை சுடவில்லையா? பெண் பிள்ளைகள் வெளியில் போகும்போது பார்த்துப் போக சொல்லும் நீங்கள், அதை ஆண் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். இந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விதையிலே மக்கச் செய்யுங்கள்.”
சொல்ல வார்த்தைகள் இல்லை..!

Share this

Related Posts