ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இன்று (ஆக., 17) அரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதே ஊரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுமையான காய்ச்சல் இருப்பதாக கூறுகின்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாடு திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைபாடு இருந்தது. கோவிட் பரிசோதனை செய்ததில் நெகடிவ் என்று தான் ரிசல்ட் வந்துள்ளது. அதன் பின்னர் டில்லி செங்கோட்டையில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்
பிரதமர் மோடியும், நீரஜ் சோப்ராவும் முகக்கவசங்களின்றி வெறும் 2 அடி இடைவெளியில் நின்று பேசினர்.
இந்நிலையில் அரியானா மாநிலம் பானிப்பட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் இன்று பங்கேற்றார். நிகழ்ச்சியின் போதே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடும் காய்ச்சல் இருப்பதாக ஆங்கில செய்திச் சேனல் ஒன்று கூறியுள்ளது.