அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் வெளியாகும் கபாலி!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கலைப்புலி தாணு தயாரித்துள்ள கபாலி படம் வரும் 22-ம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. கபாலி திரைப்படத்தில் ராதிகா ஆப்தே, அட்டகத்தி தினேஷ், கலையரசன், கிஷோர், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. கபாலி திரைப் படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 32 நிமிஷங்கள்.
படம் வெளிவருவதற்கு முன்பு அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார்கள் ரசிகர்கள். வட இந்தியாவில் 1000 திரையரங்குகளில் வெளியாகும் கபாலி படம், அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு என 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கபாலியை அமெரிக்காவில் சினி கேலக்ஸி நிறுவனம் வெளியிடுகிறது. 


இதனிடையே கபாலி செல்லிடப்பேசி செயலியும் (செல்போன் ஆப்) வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தயாரிப்பாளர் தாணு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுமட்டுமில்லாமல் கபாலி படத்தின் புதிய புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கில் ‘கபாலி’ பிரீமியர் காட்சி!

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் பிரான்ஸ் திரையரங்கமான ரெக்ஸ் சினிமாஸில் திரையிடப்படவுள்ளது.
ஜூலை 14 அன்று கபாலி படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட உள்ளதாக ரெக்ஸ் சினிமா அறிவித்துள்ளது. பாரிஸில் உள்ள இந்தத் திரையரங்கம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அரங்கம் ஆகும். ஒரே சமயத்தில் 2800 அமர்ந்து படம் பார்க்கமுடியும்.
ஜூலை 14 அன்று பிரீமியர் காட்சி நடைபெற உள்ளதால் அடுத்தநாள் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனால், சமீபத்திய நிலவரப்படி படம் இன்னும் ஒருவாரத்துக்குத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை: குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து சற்று குறைந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு விழுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது.  குற்றாலம் பகுதியில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் சீசன் களைகட்டியுள்ளது.

தொடர்கதையாகி வரும் யானை பலி: கோவையில் ரயில் மோதி மேலும் ஒரு யானை சாவு

வாலையாறு: கோவை அருகே வாலையாறு கிராமத்தில் ரயில் மோதி 9 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
தமிழகம்-கேரள எல்லையில் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லை வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 9 யானைகள் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போல யானைகளின் உயிரிழப்பை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதை அடுத்து கோவையில் யாகம் நடத்தப்பட்டு வருகின்றது.

ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்; செல்போன் சேவை முடக்கம்

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் புர்ஹான் வானியின் மரணத்தைத் தொடர்ந்து பல இடங்களில் வன்முறை பரவியதை அடுத்து ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
புல்வாமா மாவட்டம் மற்றும் ஸ்ரீநகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, யாத்திரை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கு: திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸ் திட்டம்

சென்னை: இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளை காவல்துறை துவக்கியுள்ளது.
அதன்படி, தற்போது புழல் சிறையில் உள்ள ராம்குமாரை திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
அடையாள அணிவகுப்புக்குப் பிறகு ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது கொலை வழக்கில் மேலும் ஆதாரங்களை திருட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே, ராம்குமாருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு, ஷிப்ட் முறையில் 3 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.