இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கலைப்புலி தாணு தயாரித்துள்ள கபாலி படம் வரும் 22-ம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. கபாலி திரைப்படத்தில் ராதிகா ஆப்தே, அட்டகத்தி தினேஷ், கலையரசன், கிஷோர், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. கபாலி திரைப் படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 32 நிமிஷங்கள்.
படம் வெளிவருவதற்கு முன்பு அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார்கள் ரசிகர்கள். வட இந்தியாவில் 1000 திரையரங்குகளில் வெளியாகும் கபாலி படம், அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு என 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கபாலியை அமெரிக்காவில் சினி கேலக்ஸி நிறுவனம் வெளியிடுகிறது.
இதனிடையே கபாலி செல்லிடப்பேசி செயலியும் (செல்போன் ஆப்) வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தயாரிப்பாளர் தாணு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுமட்டுமில்லாமல் கபாலி படத்தின் புதிய புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.