விலை குறிப்பிடாமல் 'கபாலி' டிக்கெட்: ரசிகர்கள் கொந்தளிப்பு

 

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.
 இப்படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து ஜூலை 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு படத்தை தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது பல்வேறு திரையரங்குகளில் தொடங்கப்பட்டு இருக்கிறது. சென்னை சத்யம் திரையரங்கில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில மணித்துளிகளில் அனைத்து டிக்கெட்களுமே விற்றுத் தீர்ந்தன.
 மேலும், பல ஊர்களில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில், சில திரையரங்குகளில் விலை என்ன என்பதை பிரின்ட் செய்யாமலேயே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் விலை இல்லை என்பதால் என்ன விலை வேண்டுமானாலும் விற்கலாம் என்பதுதான் இதற்கு காரணமாம்.
 'கபாலி' படத்தின் டிக்கெட் விலையைக் கேட்டுவிட்டு பலரும், என்ன இவ்வளவு விலையா என்று தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். ஏற்கெனவே, 'வேதாளம்' படத்துக்கு அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக புகார் எழுந்து நீதிமன்றம் வரை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விற்கப்பட வேண்டும். குறிப்பாக, முக்கிய நட்சத்திரங்களின் படங்களின் வெளியாகும்போது கண்காணிப்பு அவசியம் என்று சினிமா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் எழும் செங்கல்பட்டு பிரச்சினை
 'தெறி' திரைப்படத்துக்கு தயாரிப்பாளர் தாணு அதிக விலை கேட்கிறார் என்று சர்ச்சையானது. இதனால் செங்கல்பட்டு விநியோக ஏரியாவில் அப்படம் வெளியாகவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்ட பின்பே அங்கு வெளியானது.
 இதே சூழல் தற்போது 'கபாலி' படத்துக்கும் ஏற்பட்டு இருக்கிறது. "செங்கல்பட்டு திரையரங்க உரிமை குறித்து பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்று வருகிறது. இன்று இரவு அல்லது திங்கட்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்" என வெற்றி திரையரங்கத்தின் உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

பாகுபலி சாதனையை முறியடித்த கபாலி

நாளை மறுநாள் திரைக்கு வரஇருக்கும் ரஜினியின் ‘கபாலி’ படத்துக்கு உலகம் முழுவதும்  பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கலைப்புலி எஸ். தாணு இயக்கத்தில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கிஷோர் மற்றும் சீன, மலேசிய வில்லன் நடிகர்கள் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 

படத்தின் புரொமோஷன்களும், படத்தில் இடம்பெறும் காட்சிகள் பற்றிய விவரங்கள் என படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் அறிமுககாட்சி மட்டும் ஸ்லோ மோஷனில் சுமார் ஒன்றரை நிமிடங்கள் வருவதாகவும், அறிமுகக்காட்சியே சண்டைக்காட்சி என்று கூறப்படுகிறது.

இப்படி ஒரு மாஸ் என்ட்ரி இருந்தால் தியேட்டர் ஆரம்பமே அதிரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படத்தின் விளம்பரம் பாலிவுட் சினிமா மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அளவுக்கு இருக்கிறது. ஏன் ஹாலிவுட் என்று கூட சொல்லலாம் விமானத்தில் விளம்பரம் என்பதெல்லாம் இதுவரை யாரும் யோசித்திராத ஒன்று தான். விமானம் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை, பத்திரிகைகள் , டி.வி, இணையதளம், செல்போன் அனைத்திலும் கபாலி மயமாகவே உள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ‘கபாலி’ என்ற பெயரை கேட்டாலே குதூகலப்படும் அளவுக்கு இதன் தாக்கம் எங்கும் நிறைந்திருக்கிறது. 

இதுமட்டுமல்ல முத்தூட் பின்கார்ப் என்ற நகை அடகுவைக்கும் நிறுவனம் கபாலியின் பெயரில் தங்கம், வெள்ளி காசுகளை வெளியிடுகிறது. கேட்பரிஸ் நிறுவனம் சாக்லேட் விளம்பரம், ஏர்டெல் கபாலி ஆபர் என இன்னொரு பக்கம் அதிரடி காட்டுகிறது. இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் கபாலியை பயன்படுத்தி வருகிறது. கபாலி பொம்மையும் இந்திய மதிப்பில் 1000த்தில் தொடங்கி 5000 வரை விற்கப்படுகிறது.

மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாகுபலி’  படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட பிறகு அதன் சாதனைகள் பற்றி பேசப்பட்டது. ஆனால் ‘கபாலி’ திரையிடப்படுவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

‘பாகுபலி’ படம் டிரைலர் ‘யுடியூப்’ பில் வெளியிடப்பட்டது. இதை ஒருகோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் ‘கபாலி’ படம் திரைக்கு வருவதற்கு முன்பே இதன் ‘டீசரை’ 2 கோடிக்கும் அதிகமானோர் யுடியூப்பில் பார்த்து விட்டனர்.‘பாகுபலி’ தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழிகளில் வெளியானது. படம் திரைக்கு வந்த பிறகுதான் சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்யப்பட்டது. சீனாவில் ‘பாகுபலி’ வருகிற 22-ந் தேதி தான் திரைக்கு வருகிறது. 

ஆனால் ‘கபாலி’ தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மட்டுமல்ல மலாய் மொழியிலும் திரையிடப்படுகிறது. சீன மொழியிலும் வெளியிட இப்போதே ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேஷியா விலும் அந்தந்த மொழிகளில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு திரைக்கு வருகிறது.   உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் ‘ரெக்ஸ் சினிமாஸ்’ திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்ற பொருமையை ‘கபாலி’ பெற்றுள்ளது. உலக அளவில் ‘பாகுபலி’ 4 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் கபாலி 5 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

பாகுபலி படத்தின் வியாபாரம் ரூ.162 கோடியை தொட்டதாக கூறப்பட்டது. ஆனால் ‘கபாலி’ அதையும் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. ‘கபாலி’ வெளிநாட்டு வினியோக உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.‘பாகுபலி’ படத்தை பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூகவலைதளங்கள் மூலம் பிரபலப்படுத்தினார்கள். படக்குழுவினர் சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு நடிகர்&நடிகைகள் சென்று ‘பாகுபலி’ யை பிரபலப்படுத்தினார்கள். ஆனால் ‘கபாலி’ படத்துக்காக இந்தியாவில் முதல் முறையாக விமானத்தில் ‘கபாலி’ போஸ்டர் இடம் பெற்றது. ஏர்& ஏசியா விமான நிறுவனம் பல்வேறு சலுகைகளையும்அறிவித்துள்ளது.

இது தவிர தங்க, வெள்ளி நாணயங்கள் வெளியீடு,  தனியார் நிறுவனங்கள் தொலை தொடர்பு நிறுவனங்கள், ஆன்லைன் சேவை நிறுவனங்கள் அனைத்தும் சலுகைகளை அறிவித்து ‘கபாலி’ படத்தை விளம்பரப்படுத்துவதுடன் தங்களுக்கும் விளம்பரம் தேடிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இது எப்போதும், எந்த படத்துக்கும் இல்லாத புதிய யுத்தியாகும்.‘கபாலி’ திரைக்கு வரும் தினத்தை ரசிகர்கள் மட்டுமல்ல, பல்வேறு நிறுவனங்களும், திரை உலகினரும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்து இருப்பதும் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

வெளிநாடுகளில் இந்திய படம் என்றால் இந்திபடங்கள்தான் என்ற நிலை இருந்தது. அதை ‘பாகுபலி’ ஓரளவு முறியடித்தது. இப்போது ரஜினியின்’கபாலி’ படத்தின் மூலம் இந்திய படங்கள் என்றாலே அது தமிழ்படம் தான் என்று வெளிநாட்டினர்  கருதும் அளவுக்கு ‘கபாலி’ புகழ் கொடிகட்டி பறக்கிறது. திரைக்கு வந்த பிறகு மேலும் சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் வெளியாகும் கபாலி!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கலைப்புலி தாணு தயாரித்துள்ள கபாலி படம் வரும் 22-ம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. கபாலி திரைப்படத்தில் ராதிகா ஆப்தே, அட்டகத்தி தினேஷ், கலையரசன், கிஷோர், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. கபாலி திரைப் படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 32 நிமிஷங்கள்.
படம் வெளிவருவதற்கு முன்பு அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார்கள் ரசிகர்கள். வட இந்தியாவில் 1000 திரையரங்குகளில் வெளியாகும் கபாலி படம், அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு என 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கபாலியை அமெரிக்காவில் சினி கேலக்ஸி நிறுவனம் வெளியிடுகிறது. 


இதனிடையே கபாலி செல்லிடப்பேசி செயலியும் (செல்போன் ஆப்) வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தயாரிப்பாளர் தாணு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுமட்டுமில்லாமல் கபாலி படத்தின் புதிய புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கில் ‘கபாலி’ பிரீமியர் காட்சி!

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் பிரான்ஸ் திரையரங்கமான ரெக்ஸ் சினிமாஸில் திரையிடப்படவுள்ளது.
ஜூலை 14 அன்று கபாலி படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட உள்ளதாக ரெக்ஸ் சினிமா அறிவித்துள்ளது. பாரிஸில் உள்ள இந்தத் திரையரங்கம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அரங்கம் ஆகும். ஒரே சமயத்தில் 2800 அமர்ந்து படம் பார்க்கமுடியும்.
ஜூலை 14 அன்று பிரீமியர் காட்சி நடைபெற உள்ளதால் அடுத்தநாள் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனால், சமீபத்திய நிலவரப்படி படம் இன்னும் ஒருவாரத்துக்குத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை: குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து சற்று குறைந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு விழுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது.  குற்றாலம் பகுதியில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் சீசன் களைகட்டியுள்ளது.

தொடர்கதையாகி வரும் யானை பலி: கோவையில் ரயில் மோதி மேலும் ஒரு யானை சாவு

வாலையாறு: கோவை அருகே வாலையாறு கிராமத்தில் ரயில் மோதி 9 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
தமிழகம்-கேரள எல்லையில் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லை வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 9 யானைகள் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போல யானைகளின் உயிரிழப்பை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதை அடுத்து கோவையில் யாகம் நடத்தப்பட்டு வருகின்றது.

ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்; செல்போன் சேவை முடக்கம்

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் புர்ஹான் வானியின் மரணத்தைத் தொடர்ந்து பல இடங்களில் வன்முறை பரவியதை அடுத்து ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
புல்வாமா மாவட்டம் மற்றும் ஸ்ரீநகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, யாத்திரை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கு: திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸ் திட்டம்

சென்னை: இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளை காவல்துறை துவக்கியுள்ளது.
அதன்படி, தற்போது புழல் சிறையில் உள்ள ராம்குமாரை திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
அடையாள அணிவகுப்புக்குப் பிறகு ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது கொலை வழக்கில் மேலும் ஆதாரங்களை திருட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே, ராம்குமாருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு, ஷிப்ட் முறையில் 3 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.