விலை குறிப்பிடாமல் 'கபாலி' டிக்கெட்: ரசிகர்கள் கொந்தளிப்பு

 

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.
 இப்படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து ஜூலை 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு படத்தை தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது பல்வேறு திரையரங்குகளில் தொடங்கப்பட்டு இருக்கிறது. சென்னை சத்யம் திரையரங்கில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில மணித்துளிகளில் அனைத்து டிக்கெட்களுமே விற்றுத் தீர்ந்தன.
 மேலும், பல ஊர்களில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில், சில திரையரங்குகளில் விலை என்ன என்பதை பிரின்ட் செய்யாமலேயே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் விலை இல்லை என்பதால் என்ன விலை வேண்டுமானாலும் விற்கலாம் என்பதுதான் இதற்கு காரணமாம்.
 'கபாலி' படத்தின் டிக்கெட் விலையைக் கேட்டுவிட்டு பலரும், என்ன இவ்வளவு விலையா என்று தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். ஏற்கெனவே, 'வேதாளம்' படத்துக்கு அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக புகார் எழுந்து நீதிமன்றம் வரை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விற்கப்பட வேண்டும். குறிப்பாக, முக்கிய நட்சத்திரங்களின் படங்களின் வெளியாகும்போது கண்காணிப்பு அவசியம் என்று சினிமா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் எழும் செங்கல்பட்டு பிரச்சினை
 'தெறி' திரைப்படத்துக்கு தயாரிப்பாளர் தாணு அதிக விலை கேட்கிறார் என்று சர்ச்சையானது. இதனால் செங்கல்பட்டு விநியோக ஏரியாவில் அப்படம் வெளியாகவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்ட பின்பே அங்கு வெளியானது.
 இதே சூழல் தற்போது 'கபாலி' படத்துக்கும் ஏற்பட்டு இருக்கிறது. "செங்கல்பட்டு திரையரங்க உரிமை குறித்து பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்று வருகிறது. இன்று இரவு அல்லது திங்கட்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்" என வெற்றி திரையரங்கத்தின் உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Share this

Related Posts