ஸ்டெப் கட்டிங், பெல் பாட்டம்.... தேவ் ஆனந்த் லுக்கில் கணேஷ் வெங்கட்ராமன்

த்ரிஷா நடித்து வரும் நாயகி மையப்படம், நாயகி. தமிழ், தெலுங்கில் தயாராகிவரும் இந்த ஹாரர் காமெடியில் கணேஷ் வெங்கட்ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

படத்தின் கதை எழுபதுகளில் நடக்கிறது.

கதையின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ஸ்டெப் கட்டிங், பெல் பாட்டம் பேண்ட் என்று எழுபதுகளின் நாயகனாகவே மாறியுள்ளார் கணேஷ். தேவ் ஆனந்த் மற்றும் எல்விஸ் ப்ரெஸ்லியின் தோற்றத்தை மாதிரியாக வைத்து இவருக்கு மேக்கப் மட்டும் காஸ்ட்யூம் தயார் செய்திருக்கிறார்கள்.
 
கணேஷ் வெங்கட்ராமனின் முதல் படம், அபியும் நானும். அதில் த்ரிஷா நாயகி. அதன் பிறகு இப்போது - நாயகி திரைப்படத்தில்தான் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.

 

‘24’ பட இயக்குநர் கதை சொன்னவுடன் சூர்யாவுக்கு போன் செய்தேன்: ஒளிப்பதிவாளர் திரு பேட்டி

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா – சமந்தா நடித்துள்ள படம், 24. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியானது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு, பி.சி.ஸ்ரீராமின் சீடர். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக முன்னேறியுள்ளார். அவர் 24 படம் பற்றி கூறியதாவது:
சூர்யா தவிர வேறு யார் தயாரிப்பாளராக இருந்தாலும் 24 படம் இவ்வளவு சுலபமாக முடிவடைந்திருக்காது. தடையின்றி படப்பிடிப்பு நடத்த படப்பிடிப்புக் குழுவுக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் ஒரு தயாரிப்பாளர் என்கிற முறையில் ஒருங்கிணைத்துத் தந்தார். மிகவும் ஊக்கப்படுத்தினார்.

எல்லா ஹீரோக்களுமே தங்களை சினிமாவுக்காக அர்ப்பணித்து கொள்பவர்கள்தான். என்றாலும் சூர்யா இன்னும் ஒரு படி மேல். தனது ஆர்வத்தை செயலிலும் காண்பிப்பார்.
இன்று சினிமாவில் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்டது. அதேசமயம் இது பெரிய சவாலாகவும் உள்ளது. ஆனால் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்விதமாக கதைகள் அமைவதில்லை. ஆனால் அந்த தொழில்நுட்பத்தை நன்கு செயல்படுத்த உதவும் விதமாக அமைந்தது 24 படக் கதைக்களம்.
ஆறு ஆண்டு காலமாக ஏன் தமிழில் படங்கள் செய்யவில்லை என்று கேட்கிறார்கள். ஹிந்தியில் நான் பணியாற்றிக்கொண்டிருந்ததால் நேரமின்மை என்பது ஒரு காரணம், மேலும் ஒரு நல்ல படத்துக்காகவும் காத்திருந்தேன். அந்த ஏக்கம் 24 படத்தில் நிறைவேறியுள்ளது.
இதற்கு முன் விக்ரம் குமார், அவர் படங்களுக்கு என்னை அழைத்தபோதெல்லாம் அவருடன் பணியாற்ற நேரம் அமையவில்லை. விக்ரம் குமார் என்னிடம் இந்தக் கதையைச் சொல்லும்போது அவரைக் கூர்ந்து கவனித்தேன். அவர் கதை சொல்லி முடித்தவுடன் நான் பதில் எதுவும் சொல்லாமல் போனில் டயல் செய்துகொண்டிருந்தேன்.
என்னடா, பதில் எதுவும் சொல்லாமல் செல்போனில் பேச முயற்சி செய்கிறாரே என அவர் மனம் வருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் நான் போன் செய்தது சூர்யாவுக்கு. கதையைக் கேட்டேன். எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த படத்தைச் செய்கிறேன் என்று விக்ரம் குமார் முன்னிலையில் சூர்யாவிடம் சொன்னேன். நிறைய புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளேன். மனநிறைவு தந்த படம் இது என்றார்.

ஜங்கிள் புக் இரண்டாம் பாகம் - சுறுசுறுப்பு காட்டும் டிஸ்னி

டிஸ்னி தயாரித்துள்ள த ஜங்கிள் புக் சென்ற வாரம் இந்தியா உள்பட சில நாடுகளில் வெளியானது. இந்தியாவில் மட்டும் ஓபனிங் வீக் என்டில் 7.6 மில்லியன் டாலர்களை படம் வசூலித்தது.

ஆஸ்ட்ரேலியா 2.6 மில்லியன் டாலர்கள். இதேபோல் சில நாடுகளின் வசூலே 28.9 மில்லியன் டாலர்கள். வரும் வெள்ளிக்கிழமைதான் படம் யுஎஸ், சைனா, மெக்சிகோ போன்ற நாடுகளில் வெளியாகிறது.
 

இந்தியாவிலேயே பெரும் வரவேற்பை பெற்ற படம் யுஎஸ்ஸில் அள்ளி குவிக்கும் என்பதில் டிஸ்னிக்கு சந்தேகம் இல்லை. அதனால் இப்போதே இரண்டாம் பாகத்துக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஜஸ்டின் மார்க்கை இரண்டாம் பாகத்துக்கு திரைக்கதை எழுத பணித்துள்ளது. முதல் பாகத்தை இயக்கிய Jon Favreau இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
 
பிற விவரங்களை டிஸ்னி விரைவில் அறிவிக்க உள்ளது.

நடிகர் சங்கம் செய்தது சரியா?

அரசியல் அளவுக்கு விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது, தென்னிந்திய நடிகர் சங்கம். சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் தனியாருக்கு கட்டிடம் கட்ட அனுமதி அளித்ததை அடிப்படையாக வைத்து நடிகர் சங்கம் இரு அணிகளாக வடம் இழுக்கின்றன.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையிலான அணி ஒருபுறம். விஷால், நாசர், கார்த்தி, பொன்வண்ணன் அடங்கிய அதிருப்தி அணி மறுபுறம்.நிலம் குறித்த அடிப்படை பிரச்சனை தவிர்த்து, இன்றைய நிர்வாகிகளின் கட்சி சார்ந்த அடையாள அரசியலும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. சரத்குமார், ராதாரவி போன்றவர்களின் வெளிப்படையான அதிமுக ஆதரவு நடவடிக்கைகளை அச்சம் காரணமாக திரையுலகினர் வாய்மூடி அனுமதித்தாலும் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதை நேரடிப் பேச்சுகளில் அவதானிக்க முடிகிறது.



நடிகர் சங்கத்தின் சமீபத்திய நடவடிக்கையை, திரைத்துறையை தாண்டி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
 
நீதிமன்ற உத்தரவு காரணமாக சங்கத்தின் உறுப்பினர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டனர். அதில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, தொழில்முறையற்ற ஆயுள்கால உறுப்பினர் என குறிப்பிடப்பட்டு, சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னமும் வாக்களிக்கும் தகுதியுள்ள ஆயுள்கால உறுப்பினராக தொடர்கிறார்.
அரசியலில் நுழைந்த உடனேயே சினிமாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர் ஜெயலலிதா. கருணாநிதி முதல்வராக இருந்த போதும் இல்லாத போதும் கதை, திரைக்கதை, வசனம் என்று தள்ளாத வயதிலும் பங்களிப்பு செலுத்தி வந்திருக்கிறார். அவை குறிப்பிடத்தகுந்தவையா தரமானவையா என்பது வேறு விஷயம். ஆனால், தொடர்ந்து பங்களிப்பு செலுத்தி வருகிறார். அப்படிப்பட்ட ஒருவரை தகுதி நீக்கம் செய்து, பங்களிப்பே செய்யாத ஒருவரை இன்னும் வாக்களிக்கும் தகுதியுள்ள ஆயுள்கால உறுப்பினராக தொடர்வது வெளிப்படையான அதிமுக ஆதரவு நடவடிக்கை மற்றும் திமுக காழ்ப்புணர்வின் வெளிப்பாடு.


பாக்சராக தோன்றும் பரத்

தேவயானியின் கணவர் ராஜகுமாரனை ஹீரோவாக வைத்து ‘கடுகு’ என்ற படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் பரத் வில்லனாக நடிக்கப்போவதாக கூறப்பட்டது.

இப்படத்தின் நாயகியாக ராதிகா பிரசித்தா நடிக்கவுள்ளார். இவர் ‘குற்றம் கடிதல்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர். 
 

விஜய் மில்டன் இயக்கிவரும் இப்படத்தில் ராஜகுமாரன் புலி வேஷ கலைஞராக நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இப்படத்தில் பரத் பாக்சராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மாதவன் பாக்சராக நடித்து வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து பரத்தும் இந்த படத்தில் பாக்சராக நடிப்பது குறிப்பிடதக்கது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ரஃப் நோட் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் சில தினங்களுக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


'இது சரியில்லை’ - தேசிய விருது விழாவை புறக்கணித்தது குறித்து இளையராஜா விளக்கம்

சிறந்த பின்னணி இசைக்காக மட்டும் எனக்கு விருது வழங்குவது என்னை பாதி மட்டுமே அங்கீகரிப்பதாகும் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

   நியூ டெல்லியில் செவ்வாயன்று 63-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
 
விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ராஜவர்தன்சிங் ரத்தோர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சிறந்த நடிகருக்கான விருதை பிக்கு படத்திற்காக நடிகர் அமிதாப் பெற்றார். தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை கங்கனா ரணாவத் பெற்றுகொண்டார்.
 
சிறந்த படத்திற்கான விருதை பாகுபலி படத்திற்காக அப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும், தயாரிப்பாளர்கள் ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் பெற்றுகொண்டனர்.
 
தமிழில் விசாரணை படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை சமுத்திரக்கனியும், சிறந்த எடிட்டருக்கான விருதை மறைந்த கிஷோருக்காக அவருடைய தந்தையும் பெற்றனர். சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட விசாரணைக்கான விருதை தனுஷ், வெற்றிமாறன் சார்பில் சுரேஷ் பெற்றுகொண்டார்.
 
இளையராஜாவின் 1000வது படமான ‘தாரை தப்பட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு தேசியவிருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் இளையராஜா கலந்துகொள்ளவில்லை.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள இளையராஜா, ‘’2010 வரை சிறந்த இசையமைப்புக்காக ஒரேயொரு தேசியவிருது வழங்கப்பட்டுவந்தது. சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ண வீணா என மூன்று படங்களுக்கு நான் தேசிய விருது பெற்றுள்ளேன்.
 
ஆனால் இம்முறை சிறந்த பின்னணி இசைக்காக மட்டும் எனக்கு விருது வழங்குவது என்னை பாதி மட்டுமே அங்கீகரிப்பதாகும். எனது இசையில் ஒரு பாதி மட்டுமே சிறப்பாக உள்ளது எனச்சொல்வதாகும்’’ என்று கூறியுள்ளார்.
 
மேலும், இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த விருந்து வழங்கும் விழாவில் கலந்துகொல்லாததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
 
ஆனாலும் தேசிய விருது நிகழ்ச்சியை புறக்கணிப்பது இவருக்கு ஒன்றும் புதிதல்ல. 2010ம் ஆண்டு பழசிராஜா படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த விருதினையும் அவர் பெற்றுகொள்ளவில்லை.
 
பின்னனி இசை நன்றாக செய்பவர்களுக்கு பாடல்களை போட தெரியாதா? பின்னணி இசை, பாடல்களுக்கு என்று விருதினை தனியாக கொடுக்கிறார்கள் என்று தனது ஆதங்கத்தினை முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.