‘24’ பட இயக்குநர் கதை சொன்னவுடன் சூர்யாவுக்கு போன் செய்தேன்: ஒளிப்பதிவாளர் திரு பேட்டி

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா – சமந்தா நடித்துள்ள படம், 24. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியானது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு, பி.சி.ஸ்ரீராமின் சீடர். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக முன்னேறியுள்ளார். அவர் 24 படம் பற்றி கூறியதாவது:
சூர்யா தவிர வேறு யார் தயாரிப்பாளராக இருந்தாலும் 24 படம் இவ்வளவு சுலபமாக முடிவடைந்திருக்காது. தடையின்றி படப்பிடிப்பு நடத்த படப்பிடிப்புக் குழுவுக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் ஒரு தயாரிப்பாளர் என்கிற முறையில் ஒருங்கிணைத்துத் தந்தார். மிகவும் ஊக்கப்படுத்தினார்.

எல்லா ஹீரோக்களுமே தங்களை சினிமாவுக்காக அர்ப்பணித்து கொள்பவர்கள்தான். என்றாலும் சூர்யா இன்னும் ஒரு படி மேல். தனது ஆர்வத்தை செயலிலும் காண்பிப்பார்.
இன்று சினிமாவில் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்டது. அதேசமயம் இது பெரிய சவாலாகவும் உள்ளது. ஆனால் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்விதமாக கதைகள் அமைவதில்லை. ஆனால் அந்த தொழில்நுட்பத்தை நன்கு செயல்படுத்த உதவும் விதமாக அமைந்தது 24 படக் கதைக்களம்.
ஆறு ஆண்டு காலமாக ஏன் தமிழில் படங்கள் செய்யவில்லை என்று கேட்கிறார்கள். ஹிந்தியில் நான் பணியாற்றிக்கொண்டிருந்ததால் நேரமின்மை என்பது ஒரு காரணம், மேலும் ஒரு நல்ல படத்துக்காகவும் காத்திருந்தேன். அந்த ஏக்கம் 24 படத்தில் நிறைவேறியுள்ளது.
இதற்கு முன் விக்ரம் குமார், அவர் படங்களுக்கு என்னை அழைத்தபோதெல்லாம் அவருடன் பணியாற்ற நேரம் அமையவில்லை. விக்ரம் குமார் என்னிடம் இந்தக் கதையைச் சொல்லும்போது அவரைக் கூர்ந்து கவனித்தேன். அவர் கதை சொல்லி முடித்தவுடன் நான் பதில் எதுவும் சொல்லாமல் போனில் டயல் செய்துகொண்டிருந்தேன்.
என்னடா, பதில் எதுவும் சொல்லாமல் செல்போனில் பேச முயற்சி செய்கிறாரே என அவர் மனம் வருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் நான் போன் செய்தது சூர்யாவுக்கு. கதையைக் கேட்டேன். எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த படத்தைச் செய்கிறேன் என்று விக்ரம் குமார் முன்னிலையில் சூர்யாவிடம் சொன்னேன். நிறைய புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளேன். மனநிறைவு தந்த படம் இது என்றார்.

Share this

Related Posts