அரசியல் அளவுக்கு விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது, தென்னிந்திய நடிகர் சங்கம். சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் தனியாருக்கு கட்டிடம் கட்ட அனுமதி அளித்ததை அடிப்படையாக வைத்து நடிகர் சங்கம் இரு அணிகளாக வடம் இழுக்கின்றன.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையிலான அணி ஒருபுறம். விஷால், நாசர், கார்த்தி, பொன்வண்ணன் அடங்கிய அதிருப்தி அணி மறுபுறம்.நிலம் குறித்த அடிப்படை பிரச்சனை தவிர்த்து, இன்றைய நிர்வாகிகளின் கட்சி சார்ந்த அடையாள அரசியலும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. சரத்குமார், ராதாரவி போன்றவர்களின் வெளிப்படையான அதிமுக ஆதரவு நடவடிக்கைகளை அச்சம் காரணமாக திரையுலகினர் வாய்மூடி அனுமதித்தாலும் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதை நேரடிப் பேச்சுகளில் அவதானிக்க முடிகிறது.
நடிகர் சங்கத்தின் சமீபத்திய நடவடிக்கையை, திரைத்துறையை தாண்டி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவு காரணமாக சங்கத்தின் உறுப்பினர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டனர். அதில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, தொழில்முறையற்ற ஆயுள்கால உறுப்பினர் என குறிப்பிடப்பட்டு, சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னமும் வாக்களிக்கும் தகுதியுள்ள ஆயுள்கால உறுப்பினராக தொடர்கிறார்.
அரசியலில் நுழைந்த உடனேயே சினிமாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர் ஜெயலலிதா. கருணாநிதி முதல்வராக இருந்த போதும் இல்லாத போதும் கதை, திரைக்கதை, வசனம் என்று தள்ளாத வயதிலும் பங்களிப்பு செலுத்தி வந்திருக்கிறார். அவை குறிப்பிடத்தகுந்தவையா தரமானவையா என்பது வேறு விஷயம். ஆனால், தொடர்ந்து பங்களிப்பு செலுத்தி வருகிறார். அப்படிப்பட்ட ஒருவரை தகுதி நீக்கம் செய்து, பங்களிப்பே செய்யாத ஒருவரை இன்னும் வாக்களிக்கும் தகுதியுள்ள ஆயுள்கால உறுப்பினராக தொடர்வது வெளிப்படையான அதிமுக ஆதரவு நடவடிக்கை மற்றும் திமுக காழ்ப்புணர்வின் வெளிப்பாடு.