சென்னை: இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில் சென்னைக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.
நியூ யார்க்கில் இருந்து செயல்படும் மெர்சர் என்று நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் மக்கள் வாழ அதிகம் செலவாகும் நகரங்களில் தில்லி முதலிடத்திலும், மும்பையை அடுத்து சென்னை 3ம் இடத்திலும் உள்ளது.
மனிதர்களுக்குத் தேவையான 200 அடிப்படைப் பொருட்களின் விலைகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் வீடு முதல் போக்குவரத்து வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆய்வின் மூலம் கிடைத்திருக்கும் தகவல்கள், பல நகரங்களில் கிளைகளை வைத்துள்ள நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
உலக அளவில் எடுத்துக் கொண்டால், சென்னை மாநகரம் 158வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் உலகளவில் சென்னை 157வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
துணி மற்றும் காலணிகளைப் பொருத்தவரை சென்னையில் சற்று விலை அதிகம் என்றும், தில்லி மற்றும் மும்பையை ஒப்பிடும் போது பால், காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை சென்னையில் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டை விட, 13% சென்னையில் அதிகரித்துள்ளதும், கடந்த ஓராண்டில் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசே விற்பனை செய்யும் மது, சென்னையில் மலிவாகக் கிடைக்கும் என்று நினைத்தால் அதுவும் தவறு. மும்பையோடு ஒப்பிடுகையில் சென்னையில் மது வகைகளின் விலையும் அதிகம்.
தகவல் தொழில்நுட்ப நகரமாக மாறி வரும் பெங்களூரு 22வது இடத்தில் உள்ளது. உலக அளவில் 180வது இடத்தைப் பிடித்துள்ளது.