மாணவி ஜிஷாவை அசாம் வாலிபர் கொலை செய்தது ஏன்? திடுக்கிடும் தகவல்கள்


பெரும்பாவூர்,

சட்ட மாணவி ஜிஷா கொலை வழக்கில் காஞ்சீபுரத்தில் அசாம் வாலிபர் அமீருல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜிஷா படுகொலை 

கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் ஜிஷா(வயது 30). தலித் இனத்தை சேர்ந்த சட்ட மாணவி. கடந்த ஏப்ரல் மாதம் 28–ந்தேதி இவர் வீட்டில் இருந்த போது கற்பழிக்கப்பட்டு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க கூடுதல் டி.ஜி.பி.சந்தியா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்தில் பதுங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அம்ரூல் இஸ்லாமை(23) போலீசார் கைது செய்தனர்.

கோர்ட்டில் ஆஜர் 

இதை தொடர்ந்து கைதான அசாம் வாலிபரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வருவது அறிந்து பெரும்பாவூர் கோர்ட்டில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவரை பொதுமக்கள் தாக்கி விடக்கூடாது என்பதற்காக கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைதான அம்ரூல் இஸ்லாமை புலனாய்வு போலீசார் பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். அப்போது கறுப்பு துணியால் கட்டப்பட்ட அவர் முகத்தை மறைக்க ஹெல்மெட் அணிந்து இருந்தார். கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது போலீசார் அவரது ஹெல்மெட்டை அகற்றினார்கள். பின்னர் நீதிபதி முன் நிறுத்திய போது கறுப்பு துணியை அகற்றினார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சு, குற்றம் சாட்டப்பட்ட நபரை நோக்கி போலீசார் அடித்து துன்புறுத்தினார்களா? என்று கேள்வி கேட்டார். அதற்கு அவர் இல்லை என்று பதில் அளித்தார். அதன்பிறகு இந்த வழக்கில் வாதாட சட்ட உதவி தேவையா? என்றதற்கு அவர் ஆமாம் என்று பதில் அளித்தார்.

15 நாள் காவலில் வைக்க உத்தரவு 

இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வழக்கை வாதாடுவதற்கு வக்கீல் பி.ராஜனை நீதிபதி நியமித்தார். போலீசார் தரப்பில் அப்துல்ஜலீல் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அம்ரூல் இஸ்லாமை பலத்த பாதுகாப்புடன் போலீசார் காக்கநாட்டில் உள்ள மத்திய கிளை சிறையில் அடைத்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

மாணவி ஜிஷாவை அசாம் வாலிபர் கொலை செய்தது குறித்த போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

சட்ட மாணவி ஜிஷா கொலை வழக்கில் காஞ்சீபுரத்தில் அசாம் வாலிபர் அமீருல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

சட்ட மாணவி ஜிஷா வீட்டின் அருகே ஒரு கட்டிடம் கட்டும் பணி நடந்தது. அங்கு அமீருல் இஸ்லாம் வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன் குடிபோதையில் அமீருல் இஸ்லாம் சட்ட மாணவி ஜிஷா வீட்டு அருகே உள்ள குளியல் அறையில் ஒரு பெண் குளிப்பதை பார்த்து உள்ளார். அதற்கு அந்த பெண் அமீருல் இஸ்லாமை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், செருப்பால் தாக்கியதாக தெரிகிறது. அதை வேடிக்கை பார்த்த ஜிஷா, அமீருல் இஸ்லாமை பார்த்து கேலி செய்து சிரித்து உள்ளார். இதனால் மனதில் வஞ்சகம் கொண்ட அவர் சம்பவத்தன்று குடிபோதையில் பஸ்சை விட்டு தனியாக வந்த அவரை வஞ்சகம் தீர்த்து கொள்ள திட்டம் வகுத்தார். அதன்படி பின் தொடர்ந்து வந்த அவர் வீட்டுக்குள் வந்ததும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி உள்ளார். கொலையாளி விட்டு சென்ற செருப்பை வைத்து துப்பு துலக்கி அவரை கைது செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Share this

Related Posts