கரூர்: தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டிற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது அப்பட்டமாக தெரிந்தும் தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் மட்டும் தேர்தலை தள்ளி வைத்துள்ளது. தேர்தலை தள்ளி வைப்பதுதான் இதற்கு தீர்வா? தேர்தல் தள்ளிவைப்பு என்பது பணப்பட்டுவாடாவிற்கு மேலும் வழி வகுக்கும். நாளை தேர்தல் முடிவுகள் வந்து புதிய ஆட்சியும் அமைந்து விட்டால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் இடைத்தேர்தல் போல் நடக்கும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு அமைச்சர் உட்கார்ந்து கொண்டு தேர்தல் பணியாற்றுவார்கள். எனவே இந்த தேர்தலை தள்ளி வைத்திருக்கக்கூடாது. தள்ளி வைப்பது நேர்மையாகி விடாது. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அரவக்குறிச்சி தொகுதியில் கொடுக்கப்பட்ட பணம் பாவப்பட்ட பணம். அதை வாங்கி கொண்டு ஓட்டு போடுவது பாவத்தில் பங்கு கொள்வதற்கு சமம். தமிழகம் முழுவதும் ரூ.6ஆயிரம் கோடி வரை ஓட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. தேர்தல் கமிஷன் தி.மு.க- அ.தி.மு.க.விற்கு துணை போகிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது. அய்யம்பாளையம் அன்புநாதன் பிரச்சனையில் விசாரணை முடிவு இன்னும் வெளிவரவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)